Sunday, 15 May 2011

நேர்முகத் தேர்வில் நடந்து கொள்வது எப்படி ?



பொதுவாக நமக்கு நேர்முகத் தேர்வு என்றாலே மிகுந்த பயம் உண்டாகும். ஆங்கிலத்தில் பத்து P 's என்பார்கள். அது
Poor Preparation Produces Poor Presentation
Poor Presentation Produces Poor Results .
நேர்முகத் தேர்விற்கு முன் முன்னேற்பாடு  மிக அவசியம். வெளிர் சட்டை , உறுத்தாத நறுமணம் , ஒழுங்காக சீவப்பட்ட தலை முடி போன்றவை முக்கியம் என்றாலும் இவை மட்டும் போதாது.வேறு சில காரணிகளும் உண்டு.
1 . உங்கள் உடல் மொழி மிக்க அவசியம். நம்பிக்கையான சீரான (சுறுசுறுப்பான) நடை, உறுதியான நிதானமான பேச்சு  வசியப்படுத்தும். கண்களை மட்டுமே பார்த்து பேச வேண்டும்.
2 . உங்களை நேர்முகத்திற்கு அழைத்திருக்கும் நிறுவனம் பற்றிய செய்திகள், என்ன தயாரிக்கின்றனர் , என்ன பின் புலம், முக்கியப் பொறுப்பு வகிப்போர், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். நேர்முகத்தில் அவர்கள் நிறுவனம் பற்றி பெருமளவு
தெரிந்ததாக காட்டிக் கொண்டால் நம்மை கவனிப்பர்.
3 . அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் போட்டியாளர்கள் யார், சந்தையில் இவர்கள் பங்கு எவ்வளவு , இவர்களுடைய முக்கிய வாடிக்கையாளர்கள் யார் , இவர்கள் பொருட்களின் விலை / தரம் என்ன போன்றவை தெரிந்து இருந்தால் நல்லது.

4. நீங்கள் உங்கள் நிறுவனத்தில் செய்த சாதனைகள், முதன் முதலாய் பெற்ற பெரிய ஆர்டர், அதை பெறச்  செய்த உழைப்பு, எடுத்த ரிஸ்க்குகள், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்தது, சக பணியாளரை ஊக்குவித்தல் (நீங்கள் செய்திராவிட்டால் கூட செய்ததாகச் சொல்ல வேண்டும்) போன்றவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டும்.
5. எதற்காக எங்களிடம் வேலைக்கு வருகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் திருப்தி அடையும் வகையில் பதில் அளிக்க வேண்டும். பெரிய நிறுவனமான உங்களிடம் சேர்ந்தால் என் திறமை இன்னும் வலுப் பெறும். அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும்  என்று சொல்வது பல பதில்களில் ஒன்று.
6. மேலும் நேர்முகத் தேர்வில் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேட்கும் போது பெரும்பாலும் ஏழை நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்ததாகச் சொன்னால் அது சில மதிப்பெண்களைக் கூட்டும். பணி செய்யும் இடத்திற்கு வெகு தொலைவில் இருந்து வருவதாக சொன்னால் மதிப்பெண்கள் குறையும்.
7. எவ்வளவு காலம் எங்களோடு பணி புரிவீர்கள் என்ற கேள்விக்கு காலம் முழுக்க என்று சொன்னால் நிச்சயம் கிடைக்காது. இவன் பொய் சொல்கிறான் என்று தெரிந்து விடும். அதனால் குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு வருடம் இருப்பேன். பிடித்துப் போனால் இன்னும் பல வருடம் இருப்பேன் என்று சொன்னால் நம்புவார்கள்.
8. அதே போல நேர்முகத் தேர்வு நடத்துபவரிடம் நான் என் தனிப்பட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டே இங்கு  வந்துள்ளேன். நிறுவனம் வளரும்போது கட்டாயம் நானும் வளர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் அது மதிப்பெண்களைக் கூட்டும்.
9. அதே போல அவர்கள் மேற்கோள்கள் (reference)  கேட்கும் போது நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணும் சக ஊழியர் தொலைபேசி எண்ணைத் தர வேண்டும். உயர் அதிகாரியோ அல்லது பிடிக்காதவர் எண்ணையோ தந்தால் அது நமக்கு ஆபத்தாக முடிந்து விடும். நம்மிடம் நன்றாகப் பழகுகின்ற வாடிக்கையாளர் எண்ணைக் கூடத் தரலாம். ஆனால் அவரிடம் முன்பே சொல்லி விட வேண்டும் நம்மைப் பற்றி நன்றாகச் சொல்ல.
10. பொதுவாக இண்டஸ்ட்ரீயில் நடக்கும் மாறுதல்கள் , முன்னேற்றங்கள் போன்ற விடயங்கள் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். அதனை நேர் முகத் தேர்வு நடக்கும் போது சொல்லவேண்டும். மேலும் பொது அறிவு (அரசியல், விளையாட்டு) போன்ற விடயங்களில் நம் அறிவை அவர்களுக்கு தெரியப் படுத்தவேண்டும். அவர்கள் வெளி மாநிலத்தவராக இருந்தால் அவர் மாநிலத்தின் பெருமைகளை / நல்ல விடயங்களை  பேசினால் அவர் ஈர்க்கக் கூடும். 
பதட்டப் படாமல் கூலாக சென்று (வந்தால் மலை. இல்லையென்றால் ----- என்ற மனப் பாங்கோடு) மேற் கூறியவை செய்தால்  நேர்முகத் தேர்வில் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment