Thursday, 26 July 2012

மார்பம்






சாய்வு நாற்காலியில் பரப்பிக் கொண்டு எதிரே இருந்த மாமரத்தை வேடிக்கைப் பார்த்தேன். முன்பு நிறைய பறவைகள் வருவதும் போவதுமாய் கூடு கட்டுவதுமாய் ஒரே கொண்டாட்டமாய் இருக்கும் . இப்போது சுற்றிலும் அடுக்கப்பட்ட கான்கீரிட் அசுரர்களால் வருவது அதிகமாக குறைந்து விட்டது.
மெதுவாக என் கொங்கைகளை தடவிக் கொண்டேன்.ஒரு காலத்தில் இது என்னவெல்லாம் சந்தித்து இருக்கிறது. மகிழ்ச்சி , துயரம், வலி, பதட்டம், தவிப்பு என்று எண்ணற்ற உணர்வுகள். ராஜேஷ் பிறந்த போது உணவை வழங்கி அவனை உயிர்ப்பித்தது இந்த வெண்குருதி அல்லவா.   
முதலில் அவனுக்கு பால் புகட்ட மிகவும் சிரமமாக இருந்தது. அவனுக்கு குடிக்கத் தெரியாததால் மார்பினுள் பால் கட்டிக் கொள்ளும். வலி உயிர் போகும். குழந்தை பசியால் அழுவான். என்ன செய்வதென்று தெரியாமல் கைகளால் அழுத்தி அழுத்தி அந்த கெட்டிப் பகுதியை வெளியேற்றி பின் அவனுக்கு பால் ஊட்டுவேன். வலியின் உச்சத்தை சண்டையிட்டு வென்றுத் திரும்புவது போன்றது அது.
பயணங்களில் இன்னும் சிரமம். சுற்றிலும் இருக்கும் வல்லூறுகளின் பார்வை நம் மீதே பதிந்து இருக்கும். சற்று கூட நாகரீகமில்லாமல் குழந்தைக்கு பாலூட்டும் கொங்கைகளை காமப் பார்வையோடு அளவெடுக்கும் கும்பல்.
இரவு  ரயில் பயணத்தில் கீழ் படுக்கையில் இருந்து ராஜேஷுக்கு பால் கொடுக்க மிகவும் சிரமமாக இருக்கும். நிமிர முடியாது கூணல் முதுகில் சிறிது நேரம் அவனுக்கு பால் ஊட்டினாலே முதுகு வலி அதிகமாகி விடும்.
அவன் நிறைய பால் குடிக்க வேண்டுமெனில் நான் நிறைய சாப்பிட வேண்டும் . டாக்டர் கொடுத்த பால் பவுடர் பிடிக்காவிட்டாலும் வேறு வழியின்றி சாப்பிட வேண்டியதாயிற்று.
பயணங்களில் வியர்வை அப்பிய கொங்கைகளில் இருந்து பால் அருந்தியதால் குழந்தைக்கு இருமல் வந்து விடும். அதற்காக ஒவ்வொரு முறையும் பால் கொடுப்பதற்கு முன் என் மார்புகளை சுடு நீரில் சுத்தப்படுத்துவேன். காய்ச்சல் , சளி வந்து விடக்கூடாதென்று எனக்கு பிடித்த ஐஸ்கிரீம் , ஜீஸ் போன்றவற்றைக் கூட அவனுக்காகத் தவிர்த்தேன்.  
  பாரீனில் ப்ரெஸ்ட் பம்பர் மூலமாக மட்டும்தான் குழந்தைக்கு பால் ஊட்டுவார்களாம். அதில் என்ன சுக அனுபவம் இருக்கப் போகிறது. குழந்தை
பால் குடித்து முடித்ததும் உடம்பில் ஒரு வெற்றிடம் உண்டானதைப் போல் ஒரு உணர்வு ஏற்படும். அந்த இன்பமான தருணத்திற்கு இணை பம்பில் கிடைக்குமா?
பாலூட்ட வசதியாக இருக்குமென்று கடன் வாங்கிக் கூட முன்னால் பட்டன் வைத்த துணிகளை மட்டுமே வாங்கிக் குவித்தேன்.
ஆறு மாதங்கள் ஆன பிறகு ராஜேஷுக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்த சமயம் , பாலூட்டூம்போது மெலிதாக பின் நாளாக நாளாக அழுத்தமாக கடிக்க ஆரம்பித்தான். வலி தாங்க இயலாது துடித்தாலும் அவன் வேறு உணவு எதையும் உண்ண மாட்டானே என்பதால் பொறுத்துக் கொண்டு ஊட்டுவேன்.


சடாலென கதவைத் திறந்து ராஜேஷ் நுழைந்தான்.  எரிச்சலுடன் என்னைப் பார்த்து “ அதான் ஆஸ்பத்திரிக்கு போகணும்னு சொன்னேனே . ஞாபகம் இல்லை. கிளம்பித் தொலை “ என்றான்.
“ மார்பில் வலி அதிகமாக இருக்குப்பா. அதனால்தான் அதை தடவிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கேன். “
“ அந்த சனியனால்தான் இவ்வளவு பிரச்னையும் . அது இல்லாம இருந்திருக்கலாம் . ச்சே. எனக்கு நிறைய செலவு வச்சிடுச்சு “
வசை பாடிக்கொண்டே கிளம்பினான்.
அவன் இந்த மார்புகளில் இருந்துதான் உயிர் வாழத் தொடங்கினான். விளையாட, தூங்க, ஓய்வு எடுக்க,சாப்பிட, குடிக்கத் தொடங்கினான். அவனது எண்ணற்ற முதல் செயல்கள்  இங்கிருந்துதான் ஆரம்பித்தன.
எட்டு மாதம் வரை அவன் நேசித்த அனுபவித்த அவனுக்கு உலகமாய் இருந்த என் மார்புகள் இன்று புற்று நோயால் தாக்கப்பட்டதால் அதிகம் வெறுக்கப்பட்டதாய் , தேவையற்றதாய் , வெட்டி எறியப்பட வேண்டியதாய் வன்மத்துடன் அவனால் அந்த மார்பகங்கள் பார்க்கப்படுவது எனக்கு துயரம் தருவதாக இருக்கிறது. ஒரு நோய் எப்படி பிரியமான ஒன்றை மிகவும் வெறுக்கத்தக்கதாய் மாற்றுகிறது என்று வியப்பாக இருக்கிறது. நோய் வந்ததால் இந்த மார்புகள் என்ன பாவம் செய்தன ? இப்படி ஏதிலியாய் இடது கைகளால் புறந்தள்ளப்பட்டது ?

சாய்வு நாற்காலியில் இருந்து மருத்துவமனைக்கு கிளம்பத் தொடங்கினேன்.

 
(மஹாஸ்வேதா தேவியின் கதைச் சுருக்கத்தை ஒருவரி மட்டும் படித்த பின் நான் செய்த முயற்சி )


No comments:

Post a Comment