Wednesday, 9 March 2011

சங்க இலக்கியங்களில் சில சுவையான தகவல்கள்

இரு மாதங்களுக்கு முன்பு  சாகித்ய அகாடமி விருது வென்ற திரு. நாஞ்சில் நாடனுக்கு திருவண்ணாமலையில்  
" உண்டாட்டு " என்ற நிகழ்ச்சி நடத்துவதாகக்  கேள்விப்பட்டேன். அதென்ன உண்டாட்டு என்று தெரிந்துக் கொள்ள சங்க நூல்களைப் படிக்க நேரும்போது என்னைக் கவர்ந்த சில தகவல்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

உண்டாட்டு

உண்டாட்டு என்பது பகைவரை வென்று ஆநிரைகளை கவர்ந்து வந்த வீரர்கள் வெற்றிக் களிப்பில் மது உண்டு ஆடுவதாகும். 
ஊனும் கள்ளும் உண்பதை ‘உண்டு’ என்பது காட்டுகிறது. வேந்தன் தகுதி அறிந்து சிறப்புச் செய்தமையாலும் கள்ளுண்டமையாலும் மனம் களிப்பெய்தி ஆடியதை ஆட்டு என்பது சுட்டுகிறது. எனவே, இந்தத் துறை உண்டாட்டு எனப் பெற்றது

----------------------------------------------------------------------------------------------------------------------------------
காவல் மரம் 

பழங் காலத்தில் வேங்கை, புன்னை , வேம்பு இன்னும் சில மரங்களை வெற்றியைக் குறிக்கும் குறியீடாகவும் நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் காவல் மரமாகவும் நம்பினர். இதனை வீரர்கள் இரவு பகலாக காத்து வந்தனர். இவை சில அரசர்களால் தலைநகரில் மட்டும் தனிமரமாகவும் சிலரால் ஊர்தோறும் தனிமரமாகவும் வளர்க்கப்பட்டது.  வேந்தர் தம் பகைவரின் காவல் மரத்தை வெட்டுவது மரபு. பகைவரின் வெட்டுதலுக்கு ஆட்படாது காப்பது மானமுடைய வேந்தரின் கடமை. காவல் மரத்தின் கனியினை உண்டதற்காக ஒரு பெண் கொலைத்தண்டம்  பெற்றதை நன்னன் வரலாறு உணர்த்தும். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

நடுகல்


போர்களத்தில் விழுப்புண் பட்டு வீர மரணமெய்திய வீரனின் நினைவாக அமைக்கப்படுவதே நடுகல்லாகும்.   பின்னாளில் இது வழிபடும் தெய்வமாக உருப் பெற்றது. முதலில் பெரிய கல் ஒன்றைக்  கொண்டு வந்து அந்த வீரனின் உருவம் செதுக்குவர். அருகில் ஈட்டிகளும் கேடயங்களும் அரண் போல ஊன்றப்பட்டிருக்கும் .  மாய்ந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி மராமத்து அடியில் நட்டு தெய்வமாக வழிபடுவர். இக்காலத்தில் வழக்கத்திலிருக்கும் மதுரை வீரன், கருப்பன், முனியன் முதலிய சிறு தெய்வங்கள் நடு கல்லின் உருமாறிய அல்லது வளர்ச்சி பெற்ற நிலையின எனக் கூறலாம். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

 கொள்ளை மாற்றுதல்

வெற்றி பெற்ற படை மறவர் தோற்ற பகைவர் நாட்டில் புகுந்து கொள்ளை இடுவர். இச்செயலை தடுத்து நிறுத்த அரசன் தோற்ற வேந்தனிடம் இருந்து பெற்ற பொற்கலங்களை உருக்கி பொற்கட்டிகளாகச் செய்து வீரரின் தகுதிக்கேற்ப பரிசளிப்பான் . சில சமயம் மருத நிலத்து ஊர்களையே வழங்குதல் மரபு. பசிய பயிர்கள் விளையும் சீரூர்கள் வழங்கப்பட்டாலும் வீர்கள் அதனை ஏற்காது மருத நிலத்து ஊர்களையே விரும்பிப் பெறுவர்.    

----------------------------------------------------------------------------------------------------------------------------------

பெண்களின் ஏழு பருவங்கள் : 

பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை, அரிவை , தெரிவை , பேரிளம்பெண். 

ஆண்களின் ஏழு பருவங்கள் :

பாலன், மீளி, மறவோன் , திறவோன் , காளை , விடலை, முதுமகன் 

No comments:

Post a Comment