Monday, 21 March 2011

மழை ஏன் பெய்கிறது


என் பெயர் கண்ணன். சென்னையில் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்போது நான் திருவண்ணாமலையில் காமராஜர் சிலைக்கு முன்னால் ஒரு பெரிய மழையில் மாட்டிகொண்டு கோபத்தோடு நின்றுக் கொண்டிருக்கிறேன் . வானாபுரம் செல்வதற்கு பேருந்திற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து வெறுத்துப் போய் ஒரு ஆட்டோவை நோக்கி கை நீட்டினேன்.
" எங்கே போகணும் சார் ? "
" வானாபுரம் பக்கத்தில அத்திபாடி "
" சார். பயங்கர மழை. பதினெட்டு கிலோமீட்டர். 300 ரூபா ஆவும் " .
யோசித்தேன். மிக முக்கியமான தேவைக்காக என் நண்பன் உமா மகேஸ்வரனிடம் ஐம்பதாயிரம் கடன் கேட்டு இருந்தேன். இன்று வாங்கிச் சென்று நாளை சென்னைக்கு போய் அந்த பணத்தைக் கட்டவேண்டும்.
" சரி. வா போகலாம்"
வண்டி மகிழ்ச்சியுடன் கிளம்பியது . தாமரை நகரை அடைந்தவுடன் நன்றாக உடை அணிந்த அந்த நபர் கை அசைத்தார். ஆட்டோ அருகில் போய் நின்றது.
" தண்டராம்பட்டு போகணும் . வருமா ? "
" இல்லை சார். நாங்க அத்திபாடி போறோம் . "
" சரி. நான் செட்டிபட்டில் இறங்கிக்கிறேன் "
ஆட்டோக்காரர் என்னிடம் திரும்பி " சார். உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே . 250 ரூபா தந்தா போதும் " என்று கேட்டார் .
நானோ " சரி சரி. அவர் வரட்டும் " என்றேன்.
அவசரமாய் உள்ளே நுழைந்து தன் இடத்தை ஆக்கிரமித்தார்.
என்னைப் பார்த்து " என்ன பண்றீங்க ?" என்று கேட்டார். சொன்னேன்.
தன் பெயர் சாத்தப்பனோ சாந்தப்பனோ ஏதோ சொன்னார். புரியவில்லை. அவரது பருத்த மேனியைப் பார்த்து நானாக சோத்தப்பர் என்று சூட்டினேன். சென்னையில் விற்பனைப் பிரிவில் பணிபுரிவதாகவும் இங்கு தண்டரம்பட்டுக்கு பக்கத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு பணி நிமித்தம் செல்வதாகவும் சொன்னார். தலையை நன்றாக ஆடினேன். பெருமழை என்பதால் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி இருந்தது. சோத்தப்பர் உடனே " நம்மள விட கேரளாவில மூன்று மடங்கு அதிகமா மழை பெய்யும் . ஆனா தண்ணியே தேங்காது. பாருங்க. நாம ரோடு எல்லாம் வேஸ்ட். எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க " என்றார். சற்று தொலைவு சென்றவுடன் பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கியவுடன் " பாம்பே ரோடு எல்லாம் பளிங்கு மாதிரி இருக்கும். ஒரு பள்ளம் கூட இருக்காது. நம்ம ரோட்ட பாருங்க " என்றார். தலையை நன்றாக ஆடினேன். வேறு என்ன செய்ய ?
" உன் பெயர் என்ன ? " என்று ஆட்டோகாரரிடம் கேட்டார்.
" அண்ணாமலை "
" ஊரும் அண்ணாமலை. நீயும் அண்ணாமலையா ? வேற பேரே கிடைக்கலையா " என்று கூறி கெக்கே பிக்கே என சிரித்தார்.
தன் கையில் உள்ள புது மாடல் தொடுதிரை உள்ள அலைபேசியில் பேசலானார் " பிஸ்ஸா பாய் வருவான். வந்தா நானூறு ரூபாயும் ஒரு நாப்பது ரூபா டிப்சும் கொடுத்துடு " .
செட்டிபட்டு வந்தது. சோத்தப்பர் இறங்கினார். பெரும் பாரம் இறங்கியதைப் போல தோன்றியது.
ஆட்டோகாரர் அவரிடம் " சார். நூறு ரூபா கொடுங்க " என்றார் .
" என்ன அநியாயமா இருக்கு. சென்னையிலே எண்பது ரூபாதான். ரொம்ப கொள்ளை அடிக்காதே "
" சார். மழை. பத்து கிலோமீட்டர் . பார்த்து கொடுங்க "
" ம்ஹீம் . எண்பது ரூபாதான் என்று சொல்லியபடி காசை எடுத்து அவன் கையில் திணித்தார்.
ஆட்டோ சிறிது யோசனைக்கு பின் அத்திப்பாடி நோக்கிப் புறப்பட்டது. இருபது ருபாய் காப்பாற்றிய
மகிழ்ச்சியில் சோத்தப்பர் அடுத்த வண்டியை தேடலானார்.
சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு பள்ளிச் சிறுமிகள் சாலையில் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ஒரு பாட்டி தன் புடவையில் மழையை தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அண்ணாமலை ஆட்டோவை அவர்கள் பக்கம் நிறுத்தி ஏறச் சொன்னார்
" இல்லை பரவாயில்ல " என்ற பாட்டியிடம் " காசு எதுவும் தர வேண்டாம் " என்று சொல்லி என்னைப் பார்த்து "சார் . கொஞ்சம் முன்னாடி அட்ஜஸ்ட் பண்ணிட்டு உட்காரீங்களா ? " என்றார் .
வெறுப்புடன் முன்னாடி வந்து உட்கார்தேன். மனதில் ஆயிரம் எண்ணங்கள் . உமா மகேஸ்வரன் பணத்தை தருவானோ மாட்டானோ என்று . அவன் கொஞ்சம் fraud தான். இருந்தாலும் நம்பிக்கைதான் வாழ்க்கை.
என்னிடம் பேசத் தொடங்கினார் அண்ணாமலை. தான் பன்னிரெண்டாவது வரை ( 980 மார்க்குகள் ) படித்து இருப்பதாகவும் தன் தந்தையார் இறந்ததனால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை என்றும் இன்ஜினியரிங் சீட் கிடைத்தும் பணம் இல்லாததினால் படிக்காமல் ஆட்டோ ஒட்டி தன் குடும்பத்தைக் காப்பற்றி வருவதாகவும் சூழல் அவரை வேறு திசைக்கு திருப்பி விட்டதாகவும் சொன்னார்.
சிறுமிகளும் அந்த பாட்டியும் இறங்கிக் கொள்ள நான் அவரிடம் பேசத் தொடங்கினேன்.
" பாவம் சார் இந்த குழந்தைங்க . இவங்களாவது படிச்சி பெரிய ஆளாகி தன் தலைமுறையை வளர்த்து விடட்டும் . சூழல் எதுவும் கெடுத்திடக் கூடாது என்றார். "
முன் பின் தெரியாத அந்த குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றும் பாட்டி மழையில் நனையக் கூடாது நினைக்கும் அவரை மரியாதையோடு பார்த்தேன்.
சோத்தப்பர் போன்று குவிந்துக் கிடக்கும் மாநகர கூட்டத்தோடு தினமும் பழகும் எனக்கு இந்த சிறிய ஊரின் பெரிய மனிதர் முற்றிலும் வித்தியாசமானவர்தான்.
அத்திபாடி வந்தது.
இறங்கி அவரிடம் நானூறு ருபாய் கொடுத்தேன்.
" சார் " என்றார்.
" பரவாயில்லை . வச்சிக்கோங்க " .
" தேங்க்ஸ் சார் "
மழை பெய்துக் கொண்டே இருந்தது.
ஏன் பெய்கிறது எதற்கு பெய்கிறது என்ற காரணம் தெரிந்தது.

No comments:

Post a Comment