Tuesday 24 July 2012


நடுத்தீர்ப்பு
------------

இந்திய வரைபடம் போல அவன் சாலையில் பரந்து கிடக்கிறான். அவனது மாணி உடைந்த முட்டையாய் சிதைந்து போய் இருந்தது.மூளை பாதி வெளியில் வந்து மீதி வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. மிக வேகமாக வந்த லாரி அவனை அடித்து விட்டுச் சென்றது. ஓட்டுனர் சிறிது தூரம் சென்று லாரியை நிறுத்தி விட்டு ஓடி விட்டான். சில நிமிடங்களுக்கு முன்தான் “ நான் தம்மடிக்க போறேன். நீ முன்னாடி போ “ என்று இவன் அவனிடம் சொன்னது நினைவிற்கு வருகிறது. சில நிமிடங்கள் மொத்த வாழ்க்கையை எப்படி திசை திருப்ப முடிகிறது என்பதை இவனால் நம்ப முடியவில்லை. போலீசுக்கு போன் செய்தவனிடம் எதையும் தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். நண்பர்கள் அவனைச் சுற்றி அழுது கொண்டிருந்தனர். தூரத்தில் நின்ற லாரியை நோக்கி நடந்தான் இவன். அவனோடு கழித்த பொழுதுகள் பயாஸ்கோப்பில் ஓடத் தொடங்கின.


அப்போது மாலை ஆறு மணி என்பதால் இருட்டத் தொடங்கி விட்டது. வழக்கம் போல இந்த மாட்சிலும் வெங்கட்தான் டாப் ஸ்கோரர்.  வெங்கட் முருகனை சைக்கிளில் முன்னால் உட்கார வைத்து மிதித்தபடி காஞ்சி ரோடிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தான் .

“ டேய். தளபதி எந்த தியேட்டர்ல போடறாங்கன்னு தெரியுமா ? ஃபர்ஸ்ட் ஷோவே பாக்கணும் என்றான்.

“ விபிசி இல்லை பாலசுப்ரமணியா வில் தான் இருக்கும் “ .

“ நாளைன்னிக்கு காந்தி ஜெயந்தி . அன்னைக்கு கீழ்னாத்தூர் டீம் கூட மாட்ச் வச்சிக்கலாம் . சொல்லிடு “

“சரி “

“ இங்கதானே அகதிங்க எல்லாம் இருக்குங்க  ?“

“ ஆமாம். ஏன் ? “

“ நல்ல குஜிலி எதாவது இருக்குமான்னு பாக்கத்தான் “.

ஜீக்கோ என்றொரு பல்லியால் இமைக்க முடியாதாம். எப்போதும் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்குமாம். வெங்கட்டுக்கும் பெண்களைக் கண்டால் அப்படித்தான். புலம் பெயர்ந்தோர் நிறைய பேர் அப்போது குடியேறிக் கொண்டிருந்த காலம். நேரே அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அங்குள்ள பங்க் கடையில் பாக்கெட் பெப்சியை வாங்கிச் சப்பத் தொடங்கினார்கள் . வெங்கட் 30,000 லென்ஸ்களுள்ள ஒரு தும்பியைப் போல அங்கிருப்பவர்களை பதிவு செய்யத் தொடங்கினான் .

“ முருகா. ஒன்னும் கிடைக்க மாட்டேங்குதே. எல்லாம் தாத்தாவும் பாட்டியுமா இருக்குங்க . ச்சே “

முருகனுக்கு பயமாக இருந்ததால் “ டேய். வாடா. டைமாச்சு “ என்றான்.

வேறு எந்த மரத்தையும் விட ஓக் மரங்களே மின்னல்களால் அதிகம் தாக்கப்படுகின்றன என்ற செய்தி படித்திருக்கிறான். இலங்கைத் தமிழரும் ஓக் மரம் போலத்தான். செல்வந்தர்களாக ஊரில் இருந்தவர்கள் இங்கு வந்து ஒரு சிறிய குடிசையில் கஷ்டப்படுகிறார்களே என்று வருத்தப்பட்டான்.

அப்போது சட்டை பாவாடை அணிந்து ஒரு 15 வயதுப் பெண் ஒருவள் ஒரு பெரியவரிடம் கையினால் சைகை செய்து கிளம்பினாள். கோவிலுக்கு போகிறேன் என்று சொன்னது போல் இருந்தது அது.

எந்தத் தூண்டிலில் மாட்டக் கூடாதோ அந்த மீன் மிகச் சரியாக அங்கேயே மாட்டிக் கொண்டது.

“ முருகா. உட்கார். கிளம்பலாம் “ என்றான்.

வேகமாக சீறிய சைக்கிள் இடுக்கிப் பிள்ளையார் கோவிலுக்கு முப்பதடி முன்பு நின்றது.

“ டேய். எதுக்குடா இங்க நிக்கற ? “

“ வெடக்கோழி ஒன்னு சிக்கி இருக்கு . விடுவனா ? “

“ டேய். அவங்க பாவம்டா. ஆயிரம் கஷ்டம் அனுபவிச்சி வந்திருக்காங்க  “

“ சும்மா ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாரு. வேலையை கெடுக்காதே “.

முருகனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வீடு இங்கிருந்து 5 கி மீ என்பதால் நடந்து போகவும் முடியாது. அமைதியாக ஒரு புளியமரத்தின் ஓரமாக இருந்த கல்திட்டில் போய் அமர்ந்து கொண்டான்.

அவள் ஜீலை மாதக் காற்றைப் போல வேகமாக வந்துக் கொண்டிருந்தாள். அருகில் நெருங்க நெருங்க முருகனுக்கு இதயம் 80 , 90 என்று அடிக்க ஆரம்பித்தது. வெங்கட் சடாலென அவளை நிறுத்த சடன் பிரேக் போட்ட பஸ் போல பதறினான். மெல்ல பூனையைப் போல் பின்வாங்கி ஒரு புளியமரத்தின் பின் சென்று மறைவாக சொட்டு நீர் பாசனம் செய்தான்.

அவளோ மிரண்டு போய் ஒரு கணம் செய்வதறியாது திகைத்துப் போனாள்.

“ உங்க பெயர் என்னங்க ? உங்க ஊர்ல இப்ப பிரச்னை இல்லையே ? எதாவது உதவி வேணும்னா சொல்லுங்க “ நான் ஈழத்துக்கு சப்போர்டான ஆள்தான் . நீங்க அழகா இருக்கீங்க . எங்க படிக்கிறீங்க? “ என்றான் வெங்கட் .

அந்த பக்கத்திலிருந்து எந்த சலனமும் இல்லை.

“ ஏம்மா. சிரிக்கறதுக்கு 17 தசையை அசைச்சாப் போதுமாம். கோபப்படுவதற்கு 43 தசையை அசைக்கணும். எதுக்கு கஷ்டப்படற ? “ என்றான்.

அவளோ எதுவும் பேசாமல் நகர முயற்சித்தாள். அவள் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கிப் பார்த்தவன் “ உன் பேரு அகிலாவா ? கும்முனுதான் இருக்க “ என்றான். 

“ எனக்கு 9 மில்லிகிராம் நீர்ச்சத்தும் 1 கிராம் புரோட்டினும் தர்றியா ? அதான் மாமன் முத்தா கேக்கறேன் “ என்று அசிங்கமாக சிரித்தான்.

ஆள் அரவமற்ற அந்த இடம் மௌனத்தினை பேசிக் கொண்டிருந்தது . அவள் அவனை எரித்து விடுவது போல் முறைத்து விருட்டென நகர மிதிபட்ட நாகம் போல சீற்றமடைந்தான் வெங்கட். வேகமாக அவளை நெருங்கி அவள் இரு மார்புகளையும் முதலை உணவை கவ்வுவது போல இறுக்கிப் பிசைந்தான். வலியால் துடித்தாள்.

வெங்கட் ஆறு அடி இரண்டு அங்குலம் . 65 கிலோ இருப்பான். அவளோ மிஞ்சிப் போனால் 40 கிலோ கூட இருக்க மாட்டாள்.
தட்டிய அவள் கைகளை பிடித்து முறித்தான். வலி தாளாமல் அவள் “ ஊ “ என்று சப்தமிட்டாள் .

“ ஊமை நாயே . என்ன திமிருடி உனக்கு. ராஜீவ் காந்திய கொன்னுட்டு இங்க எதுக்குடி வந்திருக்க ? “ என்றவன் அவள் பின்புறமாக கட்டிக் கொண்டு அவள் சட்டைக்குள் தன் கைகளை நுழைத்தான். அழுது கொண்டே இருந்தவள் அவன் விரல்களின் அழுத்தத்தால் “ ஆ! ஓ ! “ என்று கதறினாள். “ கிள்ளுனா வலிக்குதா ? “ என்று கிண்டலாகக் கேட்டான்.புல்டோசரில் சிக்கிக் கொண்ட மல்லிப் பூவானது அவள் நிலை.

எட்டிப் பார்த்து பதறிய முருகன் அவசரமாக ஓடி வந்து வெங்கட்டைப் பார்த்துக் கெஞ்ச ஆரம்பித்தான்.

“ டேய். ப்ளீஸ். வேணாம்டா . தயவு செய்து விட்டுடா “

“ அரை கிலோ தேன் எடுக்க 20 லட்சம் பூக்களிடம் தேனை எடுக்க வேண்டுமாம். இவ மட்டும் என்ன சுலபமா மடங்கிடுவாளா ? என்றான்.

இரண்டு நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தவன் “ போடி நாயே உன்னால என் – மயிரைக் கூட தொட முடியாது “ என்றான்.

அணை உடைந்து கிளம்பியது நீர் அவள் கண்களில் இருந்து. அவசரமாக தன் வீடு இருக்கும் பகுதி நோக்கி ஓடினாள் உயிர் பிழைக்க ஓடும் மானைப் போல.

“ டேய் . ஏண்டா இப்படி பண்ண ?

“ மச்சி. சூப்பர்ரா. எப்படி இருந்திச்சி தெரியுமா ? அய்யோ. அவளை பார்த்தா அடுத்த தடவை அவளைப் பார்த்தா தூக்கிட்டு போக வேண்டியதுதான் “.


முருகன் லாரியை நெருங்கி பார்த்தான். பின் டயர் தனது உடலெங்கும் குருதியைப் பூசிக் கொண்டு நின்றது. இடுக்குப் பிள்ளையார் கோவிலை ஒட்டி நின்றிருந்த வண்டியை சற்றுத் தொலைவில் உள்ள கல்திட்டில் போய் அமர்ந்தான். போலீஸ் வந்ததும் அவர்களிடம் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான் முருகன.  
போலிஸ் A4   காகிதத்தில் எழுத ஆரம்பித்தனர்.

“ செப்டம்பர் 30 , 199 ----.செத்துப் பொனது யாரு உன் ஃப்ரெண்டா ?
 அவன் பேர் என்ன ?

“ ஃப்ரெண்டுதான் சார். அவன் பேரு வெங்கடேசன் “

“ லாரி பேரு என்ன போட்டுருக்கு பாரு ? “

“ அகிலான்னு போட்டுருக்கு சார்.

No comments:

Post a Comment