Saturday 6 July 2013

நிசப்தம் எழுப்பும் குரல்





FACEBOOK யில் சேர்ந்த சில மாதங்களிலே நண்பன் வேல்கண்ணன் வா.மணிகண்டனின் ப்ளாக்கை அறிமுகப்படுத்தி அவரது கவிதைகளைப் படி என்று நிர்பந்தித்தான். பயந்து படிக்க ஆரம்பித்தேன். அவர் கவிதைகள் மிகவும் ஈர்த்ததால் தொடர்ச்சியாக அவரை வாசிக்கத் தொடங்கினேன். எழுத்துக்களில் இருக்கும் மெச்சூரிட்டியைப் பார்த்ததும் அவருக்கு 35-40 வயது இருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் 30 வயது கூட நிரம்பாதவர் என்று தெரிந்ததும் இன்னும் ஆச்சர்யம் அதிகமானது. ( டி என் ஏ டெஸ்ட் செய்து உண்மையை கண்டறிய விரும்புகிறேன் ).

ஒரு முறை ஈரோட்டுக்கு பணிக்காக சென்ற நான் பின் அப்படியே பெரியார் வீட்டுக்கு செல்லலாம் என்று சென்றிருந்தேன். அன்றைய நாளில் மணி ஆதிக்க ஜாதியைத் திட்டி ஒரு பதிவிட்டு இருந்தார். சரி விளையாடலாமே  என்று எண்ணி அவரது அலைபேசி எண்ணுக்கு அழைத்து “ தம்பி நான் உசிலம்பட்டியில் இருந்து மூக்கையாத் தேவர் பேசறேன் . ஜாதியை திட்டி இன்றைக்கு பதிவிட்டு இருக்கீங்க. இனிமேல் எழுதினா அவ்வளவுதான் “ என்று 10 நிமிடம் மிரட்டினேன். அவர் பொறுமையாக தன் தரப்பு வாதத்தை எடுத்துச் சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. பிறகு உண்மையைச் சொன்னதும் அவர் நீங்கதாங்க இன்றைக்கு பேசியவர்களில் ரொம்ப டீசண்டாகப் பேசியவர் என்றும் மற்றவர்கள் அனைத்து ஸ்லாங் தமிழ்களில் இருக்கும் கெட்ட வார்த்தைகளில் அர்சித்தார்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அதன் பிறகு பெங்களூருவில் / சென்னையில் சில முறை அவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. மிகவும் எளிமையானவர் முக்கியமாக பந்தா இல்லாதவர் . ஐ.டி துறையில் நல்ல சம்பளம் வாங்கினாலும் ஆடம்பரத்தை பெருமளவு தவிர்த்தார். 3000 ரூபாய் மதிப்புள்ள அலைபேசியை போன மாதம் வரை பயன்படுத்தி வந்தார்.

அவரது கவிதைகளில் மிகவும் ஈர்க்கப்பட்ட நான் திடீரென அவர் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு கட்டுரைகள் எழுதுவதைப் பார்த்ததும் எரிச்சலானேன். அவரிடம் வேண்டாம் என்று சொன்னேன். அவர் சரிங்க என்றார்( வழக்கம் போல) . ஆனால் தொடர்ந்து அதையே செய்ய ஆரம்பித்தார். பிறகு ஒருநாள் அவர் “ சிறந்த இணையதள எழுத்தாளர்“ விருது பெற்றவுடன் தான் செய்தது சரிதான் என்று எனக்கு நிருபித்தார். ஒரு முறை கோபி சென்ற போது அவரது ஊருக்குப் ( கரட்டடிப்பாளையம்) போய் பார்க்கலாம் என்று சென்றேன். அந்த ஊரில் பிஸ்ஸா கடையைப் பார்த்ததும் திகிலடைந்துப் போனது தனிக் கதை.

ஒரு முறை அவரிடம் “ உங்களை ஒரு நபர் மிரட்டினார் என்று சொன்னீர்களே . யார் அது ?“ என்று கேட்ட கேள்விக்கு இரண்டு வருடங்கள்  கழித்தே பதிலளித்தார். அந்தளவுக்கு உஷாரான மனிதர். வசுமித்ர பற்றி ஒரு கவிஞர் போட்ட பதிவைப் படித்து தவறாக எண்ணிக் கொண்டிருந்த என்னிடம் மணிதான்  வசுமித்ர நல்ல கவிஞர் என்றும் அந்த பதிவு அவதூறு என்று சொன்னார். முதலில் நான் நம்பாவிட்டாலும் பின்னர் வசுமித்ரவை நேரில் பார்த்து பழகிய பின் மணி சொன்னது சரி என்று உணர்ந்தேன். மணி தன்னை கடுமையாக எதிர்ப்பவர்களைக் கூட காழ்ப்புணர்வு இல்லாமல் பாராட்டியதைப் பார்த்திருக்கிறேன்.

 நேற்று போட்ட ஒரு பதிவால் திரும்பவும் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார் மணிகண்டன். உணர்ச்சி வசப்படும் தமிழ் சமூகத்தில் நிதானமாக தன் கருத்துக்களை தெளிவாக தெரிவிப்பது மணியின் பலமாகத்தான் நான் கருதுகிறேன். அறிவியல் மற்றும் சுவாரஸ்யமான நடை என்ற சுஜாதாவின் இடத்தை நிரப்பக் கூடியவர்களில் ஒருவராக எனக்கு மணி தெரிகிறார். அவர்  ஒரு விஷயத்தை 360 டிகிரி கோணத்தில் பார்ப்பது நிறைய பேருக்கு எரிச்சலைத் தருவது ஆச்சர்யமில்லைதான். ஆனால் நிச்சயம் அவர் ஒரு சார்பானவர் இல்லை என்பது தொடர்ச்சியாக அவரை வாசிப்பவர்களுக்குப் புரியும். அவரிடம் நிறைய குறைகள் இருக்கின்றன ஆனால் அதை அவரிடம் மட்டும் சொல்வது நட்புக்கு அழகு என்று நினைக்கிறேன்.

நேற்று என்னை மணி அழைத்த போது “ நீங்க ஆன்ட்ராயிட் போனை வாங்குங்க. LINE APPயை தரவிறக்கம் செய்து இலவசமாக பேசலாம் மணி “ என்றேன். அவர் “ இப்பத்தாங்க ஐயாயிரம் ரூபாய் கொடுத்து நோக்கியா போன் வாங்கினேன். அதுவே போதுங்க “ என்றார்.

அதுதான் மணி.



Thursday 10 January 2013

 “பயம் வேண்டாம். நவீன கருவி “
என்றார் தர்மர்.
தருமரே சொல்லி விட்டார் என்றனர் மக்கள்.
“ நாம் வளம் பெற இதுவே வழி “
என்றார் பீமர்.
“ம்” கொட்டினர் மக்கள்.
கட்டப்பட்ட கைகளை விடுவிக்க எத்தனித்த போது
“ போராட்டம் வேண்டாம். பணிந்து செல்” என்றார் அர்சுனர்.
இது வன்முறை அல்லவா என்றனர் மக்கள்
மரண ஓலத்தில் அரற்றியவனை
“ பொய்யாக நடிக்காதே “ என்றனர் நகுல சகாதேவர்.
அனைத்தும் ஏமாற்று வேலை என்றனர் மக்கள்.
கழுத்து பலிபீடத்தைத் தழுவியது.
அரவான் கண் உயர்த்திப் பார்க்கிறான்.
நாரயணர் குறுநகையோடு புன்னகைக்கிறார்.
வழுக்கிக் கொண்டு இறங்குகிறது
கில்லட்டின்
அவன் கழுத்தைக் குறி வைத்து.

Wednesday 9 January 2013

ஒரு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை -2

“ இப்படியாக
சீதாபிராட்டியார் ராமரைப் பிரிந்து
ஒரு வருட காலம் துயரப்பட்டார் “
என்று பிரசங்கம் செய்த
லட்சுமணனிடம்
“ 14 வருடம் உன்னைப் பிரிந்த
என் தவிப்பிற்கு முன் இது எம்மாத்திரம் ? “
என்றாள் ஊர்மிளா.

-----------------------------------------------------------

கதுப்பெங்கும் 
எழும்பத் தொடங்கின
வெள்ளைத் தூண்கள்
இருண்மையான வெளியை நோக்கி
வாதையில் விம்மின
பதின் பருவ குறும்புகள்
நசுங்கியபடி



-----------------------------------------------------------
என்
நாவிலிருந்து
ஏவுகணையாய் வீசப்பட்ட
பிராய்லர் இறகு போன்ற
நகத்தில்
படிந்திருக்கிறது
அவளது
முதுகு சதை



-----------------------------------------------------------
புல்லில்
அமர்ந்த
நீர்த்துளிக்குள்
அடங்கி இருந்தது
காட்டு யானை

ஒரு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை -1

பாதுகாக்கப்படும் காட்டிற்குள் அலைந்து திரியும் சிங்கமாகவோ புலியாகவோ இருக்க எனக்கு விருப்பமில்லை. கண்டங்கள் தாண்டிப் பறக்கும் ஒரு சிறிய பறவையாக இருக்க விரும்புகிறேன்.

-------------------------------------------------------------

சில மரங்கள் 
விலகிச் செல்கின்றன
வருத்தம்தான்.
சில மரங்கள்
நெருங்கி வருகின்றன
மகிழ்ச்சிதான் .
இந்த
ரயில்
பயணத்தில்

-------------------------------------------------------------

ஓடி விளையாடிய
ஆற்றை
ஏக்கமாகப் பார்த்தது
கையில் அடைபட்டிருந்த
பாட்டில் நீர்.
காணப் பொறுக்காது
ஆற்றோடு கை சேர்த்து
அனுப்பினேன்.
நெகிழ்ச்சியுடன் அது
கத்திக் கொண்டே சொன்னது
என் காதில் விழவில்லை
நன்றியாகத்தான் இருக்கும்.

-------------------------------------------------------------
பாதி தொங்கு மீசையாய்
தன் கழுத்தில் பதிந்த
மிகுகூர் வாளினை
உயிர்பயத்தில் குளீரூட்ட முயன்ற
அரவானின் வியர்வைத் துளிகளை
உலர்த்திக் கொண்டிருந்தது
இச்சைக்காக சொந்தம் இழக்கத்
தயாரான பாண்டவர்களின்
நிம்மதிப் பெருமூச்சு.


இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை-3

குளிர் தணிக்க
நடுச் சாலையில் 
புணரும் 
அந்த இரு 
நாய்களையும் 
கல்லால் 
அடித்துப் பிரிக்கும் 
மனிதன் 
வானத்திலிருந்து 
தோன்றியவனோ ?

 -----------------------------------------------------------------------
பதறித் துடிக்கிறேன் நான் 
தண்டவாளத்திற்கு 
பக்கத்தில் உள்ள 
பூவில் 
துளி கூட 
பதட்டமின்றி 
உட்கார்ந்த 
பட்டாம்பூச்சியைப் 
பார்த்து


 -----------------------------------------------------------------------
கோழிகளுக்கு 
கதை சொல்லிக்
கொண்டிருக்கிறாள் சிறுமி

சிறுநீர் கழித்து முடித்ததும்
டவுசரில் துடைத்துக் கொண்டு
விளையாடச் செல்லும் சிறுவன்

பார்த்து ரசிக்க 
பொறுமையின்றி
ஓடிக் கொண்டிருக்கிறது ரயில்.


 -----------------------------------------------------------------------

கழிப்பறைகளால் 
அரசுக்கு வருவாய்
இல்லை என்பதை
இன்றைக்காவது 
சொல்லிவிடவேண்டும்-
தினமும் அரசை
சபித்தபடி 
சாலையோரத்தில் 
மலம் கழிக்கும் 
அந்த முதியவரிடம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை -2

மூன்று தலைமுறை கண்ட வீடு 
தன் கதையை 
ஒரு மணித்துளி 
தூவலின் நடனத்தில் 
முடித்துக் கொண்டது.

---------------------------------------------------------------------------
அறுபத்தி நான்கு துளை 
நீர்த்தூவியிலிருந்து 
பீறிட்டு வந்த 
நீர் உக்கிரமாக
அழித்துக் கொண்டிருந்தது 
நேற்றிரவு 
குழந்தையின் உதடுகளையும் 
கணவன் கை விரல்களையும் .

---------------------------------------------------------------------------

அப்பாவின் மரணத்தைக் 
காட்டிலும் பதட்டமடையச்
செய்கின்றன - விசாரிப்பவர்களின் 
கேள்விகள்

---------------------------------------------------------------------------
வண்னத்துப்பூச்சியின் சிறகுகளாய்
படபடத்து வழியெங்கும் 
கை அசைத்து 
வழி அனுப்பிய
மொட்டுகளிடம் 
ஒரு சலனத்தையும் காட்டாத 
அவர்
எந்த முகத்தோடு 
வேண்டுவார் ஐயப்பனிடம்
வாழ்வில் மகிழ்ச்சி 
பெருக வேண்டும் என்று ?

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை - 1

கடந்து சென்ற 
அந்த உதவுகை ஊர்தியில் 
இருப்பவருக்காக 
சில மணித்துளிகள் 
கண் மூடி பிரார்த்தித்த
அந்த சிறுவனின் 
காலில் விழத் துடித்தது 
மனசு

---------------------------------------------------------------------------------


முட்கள் 
ஆவலோடு 
நகர்கின்றன
எந்த 
மணித்துளி 
வரலாறாய் 
மாறப் போகிறது ?



---------------------------------------------------------------------------------


சாராயம் குடிக்க 
காசு தராததால் 
அம்மிக் குழவி போட்டு 
தலை நசுக்கப்பட்ட 
ஆத்தா நினைத்தாளோ .

நண்பனோடு தெருவில் 
நின்று பேசியதால் 
சந்தேகப்பட்டு விஷம் வைத்து 
சாகடிக்கப்பட்ட 
மனைவி நினைத்தாளோ

ஜாதியை இகழ்ந்ததால்
தலைவெட்டிக்
கொல்லப்பட்ட
நண்பன் நினைத்தானோ

பேருந்தில்
கையில் விலங்கோடு
தும்மிக் கொண்டிருந்த
அந்த கைதியை .

யார் நினைத்திருப்பார் ?



---------------------------------------------------------------------------------

" என்னவாக விருப்பம் ?"
என்ற டீச்சரின் கேள்விக்கு
" எஞ்சினியர் , டாக்டர் , போலீஸ் " என்று
எதைச் சொல்வது என்று
குழப்பமாக சிந்திக்கும் தருணம்
வரவில்லை -
சிக்னலில் பிச்சை எடுக்கும்
சிறுவனுக்கு.