Sunday, 15 May 2011

நேர்முகத் தேர்வில் நடந்து கொள்வது எப்படி ?



பொதுவாக நமக்கு நேர்முகத் தேர்வு என்றாலே மிகுந்த பயம் உண்டாகும். ஆங்கிலத்தில் பத்து P 's என்பார்கள். அது
Poor Preparation Produces Poor Presentation
Poor Presentation Produces Poor Results .
நேர்முகத் தேர்விற்கு முன் முன்னேற்பாடு  மிக அவசியம். வெளிர் சட்டை , உறுத்தாத நறுமணம் , ஒழுங்காக சீவப்பட்ட தலை முடி போன்றவை முக்கியம் என்றாலும் இவை மட்டும் போதாது.வேறு சில காரணிகளும் உண்டு.
1 . உங்கள் உடல் மொழி மிக்க அவசியம். நம்பிக்கையான சீரான (சுறுசுறுப்பான) நடை, உறுதியான நிதானமான பேச்சு  வசியப்படுத்தும். கண்களை மட்டுமே பார்த்து பேச வேண்டும்.
2 . உங்களை நேர்முகத்திற்கு அழைத்திருக்கும் நிறுவனம் பற்றிய செய்திகள், என்ன தயாரிக்கின்றனர் , என்ன பின் புலம், முக்கியப் பொறுப்பு வகிப்போர், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். நேர்முகத்தில் அவர்கள் நிறுவனம் பற்றி பெருமளவு
தெரிந்ததாக காட்டிக் கொண்டால் நம்மை கவனிப்பர்.
3 . அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் போட்டியாளர்கள் யார், சந்தையில் இவர்கள் பங்கு எவ்வளவு , இவர்களுடைய முக்கிய வாடிக்கையாளர்கள் யார் , இவர்கள் பொருட்களின் விலை / தரம் என்ன போன்றவை தெரிந்து இருந்தால் நல்லது.

4. நீங்கள் உங்கள் நிறுவனத்தில் செய்த சாதனைகள், முதன் முதலாய் பெற்ற பெரிய ஆர்டர், அதை பெறச்  செய்த உழைப்பு, எடுத்த ரிஸ்க்குகள், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்தது, சக பணியாளரை ஊக்குவித்தல் (நீங்கள் செய்திராவிட்டால் கூட செய்ததாகச் சொல்ல வேண்டும்) போன்றவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டும்.
5. எதற்காக எங்களிடம் வேலைக்கு வருகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் திருப்தி அடையும் வகையில் பதில் அளிக்க வேண்டும். பெரிய நிறுவனமான உங்களிடம் சேர்ந்தால் என் திறமை இன்னும் வலுப் பெறும். அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும்  என்று சொல்வது பல பதில்களில் ஒன்று.
6. மேலும் நேர்முகத் தேர்வில் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேட்கும் போது பெரும்பாலும் ஏழை நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்ததாகச் சொன்னால் அது சில மதிப்பெண்களைக் கூட்டும். பணி செய்யும் இடத்திற்கு வெகு தொலைவில் இருந்து வருவதாக சொன்னால் மதிப்பெண்கள் குறையும்.
7. எவ்வளவு காலம் எங்களோடு பணி புரிவீர்கள் என்ற கேள்விக்கு காலம் முழுக்க என்று சொன்னால் நிச்சயம் கிடைக்காது. இவன் பொய் சொல்கிறான் என்று தெரிந்து விடும். அதனால் குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு வருடம் இருப்பேன். பிடித்துப் போனால் இன்னும் பல வருடம் இருப்பேன் என்று சொன்னால் நம்புவார்கள்.
8. அதே போல நேர்முகத் தேர்வு நடத்துபவரிடம் நான் என் தனிப்பட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டே இங்கு  வந்துள்ளேன். நிறுவனம் வளரும்போது கட்டாயம் நானும் வளர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் அது மதிப்பெண்களைக் கூட்டும்.
9. அதே போல அவர்கள் மேற்கோள்கள் (reference)  கேட்கும் போது நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணும் சக ஊழியர் தொலைபேசி எண்ணைத் தர வேண்டும். உயர் அதிகாரியோ அல்லது பிடிக்காதவர் எண்ணையோ தந்தால் அது நமக்கு ஆபத்தாக முடிந்து விடும். நம்மிடம் நன்றாகப் பழகுகின்ற வாடிக்கையாளர் எண்ணைக் கூடத் தரலாம். ஆனால் அவரிடம் முன்பே சொல்லி விட வேண்டும் நம்மைப் பற்றி நன்றாகச் சொல்ல.
10. பொதுவாக இண்டஸ்ட்ரீயில் நடக்கும் மாறுதல்கள் , முன்னேற்றங்கள் போன்ற விடயங்கள் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். அதனை நேர் முகத் தேர்வு நடக்கும் போது சொல்லவேண்டும். மேலும் பொது அறிவு (அரசியல், விளையாட்டு) போன்ற விடயங்களில் நம் அறிவை அவர்களுக்கு தெரியப் படுத்தவேண்டும். அவர்கள் வெளி மாநிலத்தவராக இருந்தால் அவர் மாநிலத்தின் பெருமைகளை / நல்ல விடயங்களை  பேசினால் அவர் ஈர்க்கக் கூடும். 
பதட்டப் படாமல் கூலாக சென்று (வந்தால் மலை. இல்லையென்றால் ----- என்ற மனப் பாங்கோடு) மேற் கூறியவை செய்தால்  நேர்முகத் தேர்வில் வெற்றி நிச்சயம்.

Saturday, 14 May 2011

ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜெய்டபூரில் 9,900 MW  அணு மின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் அமைக்கப்படும்  Evolutionary Pressurized Reactors (EPR ) இதுவரை  உலகில் வேறு எங்கும் பயன்படுத்தியது  இல்லை ( not commissioned yet ) . அதனால் இது செயல்படும்போது  ஏற்படும்  பிரச்னைகளை இதை வடிவமைத்து தரும் AREVA விற்கே முழுமையாக தெரியாதபோதும், இந்த Reactorகளின்  நம்பகத் தன்மையும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருக்கும்போது அரசு எப்படி ஒப்புக் கொண்டது என்பது ஆச்சர்யமாக உள்ளது .
ஒரு லட்சம் கோடி செலவு திட்டத்தை எந்த மாதிரி இடத்தில் தொடங்கப் போகிறார்கள் தெரியுமா? SEISMIC ZONE 3 நிலையில் உள்ள 1985 முதல் 2005  வரை  சுமார் 92 சிறிய நில நடுக்கங்களைக் கண்ட இடத்தில். அதிகபட்சமாக 1993ல் ரிக்டர் 6 .2 பதிவாகி உள்ளது.  நில நடுக்கங்களை சமாளிக்கும் திறன் கொண்ட அதிக பாதுகாப்பு வசதி கொண்ட அணு மின் நிலையங்கள் அமைத்த  ஜப்பானே புகுஷிமாவில் தடுமாறும்போது நாம் எந்த நம்பிக்கையில் இந்த திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்துவோம் அதுவும் நில நடுக்க பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் ?
மேலும் இந்தியா சொந்தமாகவே 18 PHWR களை (pressurised heavy water reactor) தயாரித்து அதை வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் PHWR முறையில் தயாரிக்காமல் புதிய முறையான EPR முறையில் தயாரிக்க வேண்டும் ? மேலும் 1 MWe க்கு EPR  முறையில் இருபது ௦ கோடி செலவாகும். ஆனால் PHWR முறையிலோ 1 MWeக்கு எட்டு கோடிதான் செலவாகும்.  எதற்கு அரசாங்கம் அதிக செலவில் ரிஸ்க் எடுக்கிறது ?
எனினும் இந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளான கொங்கன் பசாவ் சமிதி மற்றும் ஜனஹிட் சேவா சமிதி முதலியன இத்திட்டத்தை எதிர்த்து போராடுகின்றன. வழக்கம்  போல மகாராஷ்டிரா முதல்வரும் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சரும் இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று சூளுரைத்துள்ளனர்.
மொத்தமுள்ள 2400 குடும்பங்களில்  வெறும் 154 குடும்பங்கள் மட்டுமே இதுவரை நிலத்தை ஒப்படைத்து விடுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு BNP பரிபாஸ் மற்றும் HSBC வங்கிகள் பெருமளவு நிதி தர சம்மதித்துள்ளன.  அந்த வங்கிகள் இந்த திட்டத்திற்கு பணம் கொடுக்க கூடாது என்று GREEN PEACE என்ற அமைப்பு  கையெழுத்து  இயக்கம் ஆரம்பித்துள்ளனர்.     நீங்களும் அதில் பங்கு பெறுங்கள்.
இதற்கு பதிலாக சூரிய ஒளி மற்றும் BIOMASS போன்ற ஆபத்தற்ற மின் உற்பத்தி திட்டங்களுக்கு இவர்கள் முக்கியத்துவம் தரலாமே.
மிகுந்த ஆபத்தினை உடைய அணு மின் திட்டங்களை செயல்படுவதில் இந்த அரசு காட்டும் ஆர்வம் மக்கள் நலம் பற்றிய எந்த அக்கறையும் இவர்களுக்கு இல்லை என்பது வெளிப்படுத்துகிறது. 

Friday, 29 April 2011

பாவப்பட்ட மனிதர்












இந்த பாவப்பட்ட மனிதரைக் காப்பாற்ற வக்கில்லாத துப்பில்லாத மத்திய 
மாநில அரசுகள் முறையே சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போரையும் 2G இல் ஊழல் செய்தவர்களையும் காப்பாற்ற துடிப்பதைப் பார்க்கும்போது வாயில் இருந்து வெளி வரும் இரு விஷயங்களில் ஒன்றை பொது வெளி காரணமாக அடக்கி இன்னொன்றை வெளியிடுகிறேன். அடத் தூ தூ .







Wednesday, 30 March 2011

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - சில தகவல்கள்


சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கவும் பொது மக்களுக்கு உதவவும் சில முக்கிய மாநகர்களில் கொண்டு வரப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில் திட்டம்.
சென்னையில் இரு பாதைகளில், வண்ணாரப்பேட்டைலிருந்து ப்ராட்வே, ஸ்பென்சர்ஸ், அண்ணாசாலை, கிண்டி வழியே சென்னை விமான நிலையத்திற்கும் (23.1 கிமீ) மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, பரங்கிமலை வரை ( 22 கி மீ) இரண்டுமே தலா 18 நிலையங்கள் உள்ளவாறு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சுமார் Rs .16000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதில் 41 % தொகையை மத்திய மாநில அரசுகளும் மீதியை Japan International Cooperation Agency (JICA) இடம் கடன் பெற்று செலவழிக்கப் போகின்றன.
இதில் வன்னாரப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை வரை தரைக்கு கீழேயும் பிறகு விமான நிலையம் வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை தரைக்கு கீழேயும் பிறகு பரங்கிமலை வரை தூண்களுக்கு மேலேயும் செல்லும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
சுரங்க வழியை தரைக்கு சுமார் 12 மீ. க்கு கீழே வரும்படி அமைக்கப் போகிறார்கள். 4 கார் (1038 பிரயாணிகள்) மற்றும் சில வருடம் கழித்து 6 கார் (1580 பிரயாணிகள்) தொடர் வண்டிகள் இதில் பயன்படுத்தப்படும்.
இந்த தடங்களில் 2016 ஆம் ஆண்டு தினமும் 7,56 ,466 பேரும் 2026 ஆம் ஆண்டு தினமும் 10,64 ,048 பேர்களும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணசீட்டாக ஸ்மார்ட்கார்டும், தரைக்கு கீழ் உள்ள நிலையங்கள் முழுதும் குளிரூடப்பட்டவைகளாக இருக்கும்படி
அமைக்கப்பட்டுள்ளது . தொடர் வண்டிகள் சுமார் 80 கிமீ வேகத்தில் செல்லும். காலை ஐந்தில் இருந்து நள்ளிரவு 12 வரை இதனை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
முதல் 2 கிமீ வரை Rs .8 ல் ஆரம்பித்து அதிகபட்சமாக Rs .23 வரை பயணத் தொகையாக நிர்ணயம் செய்துள்ளனர். சுரங்க வழிகளில், பயணசீட்டில் விளம்பரங்கள் மற்றும் வண்டி நிறுத்துமிடம் மூலம் பணம் திரட்டவும் முடிவு செய்துள்ளனர்.
நாமும் ஒரு புதிய பயணத்திற்கு தயாராவோம்.

Monday, 21 March 2011

மழை ஏன் பெய்கிறது


என் பெயர் கண்ணன். சென்னையில் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்போது நான் திருவண்ணாமலையில் காமராஜர் சிலைக்கு முன்னால் ஒரு பெரிய மழையில் மாட்டிகொண்டு கோபத்தோடு நின்றுக் கொண்டிருக்கிறேன் . வானாபுரம் செல்வதற்கு பேருந்திற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து வெறுத்துப் போய் ஒரு ஆட்டோவை நோக்கி கை நீட்டினேன்.
" எங்கே போகணும் சார் ? "
" வானாபுரம் பக்கத்தில அத்திபாடி "
" சார். பயங்கர மழை. பதினெட்டு கிலோமீட்டர். 300 ரூபா ஆவும் " .
யோசித்தேன். மிக முக்கியமான தேவைக்காக என் நண்பன் உமா மகேஸ்வரனிடம் ஐம்பதாயிரம் கடன் கேட்டு இருந்தேன். இன்று வாங்கிச் சென்று நாளை சென்னைக்கு போய் அந்த பணத்தைக் கட்டவேண்டும்.
" சரி. வா போகலாம்"
வண்டி மகிழ்ச்சியுடன் கிளம்பியது . தாமரை நகரை அடைந்தவுடன் நன்றாக உடை அணிந்த அந்த நபர் கை அசைத்தார். ஆட்டோ அருகில் போய் நின்றது.
" தண்டராம்பட்டு போகணும் . வருமா ? "
" இல்லை சார். நாங்க அத்திபாடி போறோம் . "
" சரி. நான் செட்டிபட்டில் இறங்கிக்கிறேன் "
ஆட்டோக்காரர் என்னிடம் திரும்பி " சார். உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே . 250 ரூபா தந்தா போதும் " என்று கேட்டார் .
நானோ " சரி சரி. அவர் வரட்டும் " என்றேன்.
அவசரமாய் உள்ளே நுழைந்து தன் இடத்தை ஆக்கிரமித்தார்.
என்னைப் பார்த்து " என்ன பண்றீங்க ?" என்று கேட்டார். சொன்னேன்.
தன் பெயர் சாத்தப்பனோ சாந்தப்பனோ ஏதோ சொன்னார். புரியவில்லை. அவரது பருத்த மேனியைப் பார்த்து நானாக சோத்தப்பர் என்று சூட்டினேன். சென்னையில் விற்பனைப் பிரிவில் பணிபுரிவதாகவும் இங்கு தண்டரம்பட்டுக்கு பக்கத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு பணி நிமித்தம் செல்வதாகவும் சொன்னார். தலையை நன்றாக ஆடினேன். பெருமழை என்பதால் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி இருந்தது. சோத்தப்பர் உடனே " நம்மள விட கேரளாவில மூன்று மடங்கு அதிகமா மழை பெய்யும் . ஆனா தண்ணியே தேங்காது. பாருங்க. நாம ரோடு எல்லாம் வேஸ்ட். எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க " என்றார். சற்று தொலைவு சென்றவுடன் பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கியவுடன் " பாம்பே ரோடு எல்லாம் பளிங்கு மாதிரி இருக்கும். ஒரு பள்ளம் கூட இருக்காது. நம்ம ரோட்ட பாருங்க " என்றார். தலையை நன்றாக ஆடினேன். வேறு என்ன செய்ய ?
" உன் பெயர் என்ன ? " என்று ஆட்டோகாரரிடம் கேட்டார்.
" அண்ணாமலை "
" ஊரும் அண்ணாமலை. நீயும் அண்ணாமலையா ? வேற பேரே கிடைக்கலையா " என்று கூறி கெக்கே பிக்கே என சிரித்தார்.
தன் கையில் உள்ள புது மாடல் தொடுதிரை உள்ள அலைபேசியில் பேசலானார் " பிஸ்ஸா பாய் வருவான். வந்தா நானூறு ரூபாயும் ஒரு நாப்பது ரூபா டிப்சும் கொடுத்துடு " .
செட்டிபட்டு வந்தது. சோத்தப்பர் இறங்கினார். பெரும் பாரம் இறங்கியதைப் போல தோன்றியது.
ஆட்டோகாரர் அவரிடம் " சார். நூறு ரூபா கொடுங்க " என்றார் .
" என்ன அநியாயமா இருக்கு. சென்னையிலே எண்பது ரூபாதான். ரொம்ப கொள்ளை அடிக்காதே "
" சார். மழை. பத்து கிலோமீட்டர் . பார்த்து கொடுங்க "
" ம்ஹீம் . எண்பது ரூபாதான் என்று சொல்லியபடி காசை எடுத்து அவன் கையில் திணித்தார்.
ஆட்டோ சிறிது யோசனைக்கு பின் அத்திப்பாடி நோக்கிப் புறப்பட்டது. இருபது ருபாய் காப்பாற்றிய
மகிழ்ச்சியில் சோத்தப்பர் அடுத்த வண்டியை தேடலானார்.
சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு பள்ளிச் சிறுமிகள் சாலையில் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ஒரு பாட்டி தன் புடவையில் மழையை தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அண்ணாமலை ஆட்டோவை அவர்கள் பக்கம் நிறுத்தி ஏறச் சொன்னார்
" இல்லை பரவாயில்ல " என்ற பாட்டியிடம் " காசு எதுவும் தர வேண்டாம் " என்று சொல்லி என்னைப் பார்த்து "சார் . கொஞ்சம் முன்னாடி அட்ஜஸ்ட் பண்ணிட்டு உட்காரீங்களா ? " என்றார் .
வெறுப்புடன் முன்னாடி வந்து உட்கார்தேன். மனதில் ஆயிரம் எண்ணங்கள் . உமா மகேஸ்வரன் பணத்தை தருவானோ மாட்டானோ என்று . அவன் கொஞ்சம் fraud தான். இருந்தாலும் நம்பிக்கைதான் வாழ்க்கை.
என்னிடம் பேசத் தொடங்கினார் அண்ணாமலை. தான் பன்னிரெண்டாவது வரை ( 980 மார்க்குகள் ) படித்து இருப்பதாகவும் தன் தந்தையார் இறந்ததனால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை என்றும் இன்ஜினியரிங் சீட் கிடைத்தும் பணம் இல்லாததினால் படிக்காமல் ஆட்டோ ஒட்டி தன் குடும்பத்தைக் காப்பற்றி வருவதாகவும் சூழல் அவரை வேறு திசைக்கு திருப்பி விட்டதாகவும் சொன்னார்.
சிறுமிகளும் அந்த பாட்டியும் இறங்கிக் கொள்ள நான் அவரிடம் பேசத் தொடங்கினேன்.
" பாவம் சார் இந்த குழந்தைங்க . இவங்களாவது படிச்சி பெரிய ஆளாகி தன் தலைமுறையை வளர்த்து விடட்டும் . சூழல் எதுவும் கெடுத்திடக் கூடாது என்றார். "
முன் பின் தெரியாத அந்த குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றும் பாட்டி மழையில் நனையக் கூடாது நினைக்கும் அவரை மரியாதையோடு பார்த்தேன்.
சோத்தப்பர் போன்று குவிந்துக் கிடக்கும் மாநகர கூட்டத்தோடு தினமும் பழகும் எனக்கு இந்த சிறிய ஊரின் பெரிய மனிதர் முற்றிலும் வித்தியாசமானவர்தான்.
அத்திபாடி வந்தது.
இறங்கி அவரிடம் நானூறு ருபாய் கொடுத்தேன்.
" சார் " என்றார்.
" பரவாயில்லை . வச்சிக்கோங்க " .
" தேங்க்ஸ் சார் "
மழை பெய்துக் கொண்டே இருந்தது.
ஏன் பெய்கிறது எதற்கு பெய்கிறது என்ற காரணம் தெரிந்தது.

வசை


எங்களுடைய உயர் அதிகாரி எங்களை பாலக்காடிற்கு போகச் சொல்லி விட்டார். அங்கே தோனி (தோனி என்றால் உங்களுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) என்றொரு இடம். அதற்கு பக்கத்தில் இருக்கும் ரயில்வே டிவிசன் ஆபீசுக்கு செல்ல வேண்டும். என்னோடு கிஷோரும் சாந்தமூர்த்தியும் வருகிறார்கள். ஞாயிறு மதியம் கோவை எக்ஸ்ப்ரஸில் கிளம்பி கோவை சென்று அங்கு ரூம் போட்டு பின்னர் மறுநாள் காலை பாலக்காடு செல்லலாம் என்று திட்டம்.
கம்பெனி செலவு என்பதால் நாங்கள் எப்போதும் AC இல்தான் செல்வது வழக்கம். எங்கள் சொந்த காரியத்திற்கு சென்றால் sleeper (அ) unreserved . சென்னை சென்ட்ரலில் குழுமி இருந்த மனிதக் கூட்டத்தில் எவரிடமும் இடிபடாமல் இருக்க வளைந்து நெளிந்து பறந்து எங்கள் கோச்சை அடைந்தோம். எப்போதும் சார்டைப் பார்க்கையில் நம்மோடு இன்று யாரெல்லாம் பயணம் செய்யப் போகிறார்கள் என்று பார்ப்பது வழக்கம். பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் நம் பக்கத்து சீட் என்றால் அந்த பயணமே முழுமை அடைந்ததாக அர்த்தம். இந்த முறை சில தாத்தாக்களும் பாட்டிகளும் எங்களோடு பயணிப்பதால் நாங்கள் வாழ்க்கையே வெறுத்துப் போனது உங்களுக்கு பேரின்பத்தை அளிக்கும்.
மெல்லிய சீரான குளிர் காற்று என் உடலை புணரத் தொடங்கியது. ஆசனத்தில் சாய்ந்தபடி ஹெட்போனில் காற்றுக்குள்ளே வாசம் போல எனக்குள் நீ என்ற யுவனின் குரலைக் கேட்டபடி வெளியே பார்த்தேன். பனை மரங்கள், நீர்குட்டைகள் என்று அனைவருக்கும் எங்கள் கண்களால் செய்தி பரிமாறிக்கொண்டு சென்றோம். பரிசோதகர் எங்களிடம் வந்து சோதனை இட்டு பின்னர் எதாவது இருக்கை காலியாக உள்ளதா ஏதேனும் சம்பாதிக்க முடியுமா என்று தீவிரமாக சார்டையே வைத்து ஏதோ சமன்பாடு செய்து கொண்டு இருந்தார்.
காட்பாடி முன்னரும் பின்னரும் ஏகப்பட்ட தென்னை மரங்கள். ஒரு வேளை இந்த ஊர் வெயிலூராக இருப்பதற்கு இது காரணமோ என்று கிஷோர் கேட்டான். எதிரே இருந்த தாத்தாவை வெறுப்புடன் பார்த்தபடி எனக்கு தெரியாது என்று சலிப்புடன் சொன்னேன். என் கவலை எனக்கு. என்னிடம் எதுவும் தேறாது என்று சாந்தமூர்த்தியிடம் போய் பாலாறு வற்றியதற்கு காரணம் ஆம்பூர் சாயக் கழிவு பட்டறைகளா, பாலக்காடில் ஒரு கோட்டை இருக்கிறதாமே அது நம் செஞ்சி கோட்டை போல் இருக்குமா என்றெல்லாம் ரகுவிடம் கேட்க, சாந்தமூர்த்தி விஞ்ஞானி ஆக வேண்டிய பிள்ளையை விற்பனைப் பிரிவுக்கு மாற்றி இழுத்து விட்டோமோ என்ற கவலையில் ஆழ்ந்தான். சேலம் வந்தவுடன் அந்த பெரியவர்கள் இறங்கிக் கொள்ள நாங்கள் சற்று நிம்மதி அடைந்தோம்.
சிறிது நேரத்தில் போலியோ தாக்கப்பட்டு நடக்க முடியாத மிகவும் அழுக்காக பக்கத்தில் வந்தால் நாற்றமடிக்கும் அந்தச் சிறுவன் ஒரு அழுக்குத் துணியால் தரையை துடைத்துக் கொண்டு வந்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு குடலைப் புரட்டியது. ஓரமாக கர்சீப்பால் என் மூக்கைப் பொத்திக் கொண்டு அவனைப் பார்ப்பதை தவிர்த்தேன். சாந்தமூர்த்தி அவனுக்கு ஐந்து ருபாய் கொடுத்தான். நான் அவனிடம் இது அதிகம் என்பது போல பார்த்தேன்.
அவன் இப்போது என்னைப் பார்த்து நான் கடவுள் படத்தில் பூஜா ஆர்யாவிடம் மரண பிச்சை கேட்பது போல காசு காசு என்று கெஞ்சினான். கொடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கும் போது உள்ளே நுழைந்த அந்த பரிசோதகர் ஆவேசமாக அவனைப் பார்த்து "நாயே. உன்னை இங்க எல்லாம் வரகூடாதுன்னு சொல்லியும் திமிரெடுத்து இங்க வரியா? பரதேசி. கொன்னுடுவேன். ஓடிப் போய்டு" என்று கத்தி விட்டு என்னைப் பார்த்து "பாருங்க சார். இந்த நாய்க்கு எதாவது வேணும்னா second seating / unreserved போலாம்ல. சொகுசா AC ரூமுக்கு வந்து பிச்சை எடுக்குது பன்னாடை. அவங்கம்மா இந்த சனியன ரயிலுக்கு பெத்துட்டு ஜாலியா எவன்கூடவோ இருக்கா. இது நம்ம தாலிய அறுக்குது" என்று சகட்டு மேனியில் கெட்ட வார்த்தைகளால் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு திட்டினார். அவரது இன்றைய இலக்கு தவறி விட்டது போலும்.
AC ரூமுக்கு வந்து பிச்சை எடுத்த அந்த மாபெரும் குற்றத்திற்காக தன் சுயமரியாதை இழந்து வசைச் சொற்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாய் நொந்து சென்றான் அவன். ஈரோடு தாண்டியவுடன் ஒருவன் கையில் DVD களை அடுக்கியபடி "சார். புது படம். புது படம்" என்று கூவியபடி என்னிடம் நீட்டினான். தமிழ் சினிமாக்களை இப்போது எந்த வடிவிலும் பார்க்கும் மன தைரியம் எனக்கு இல்லாததால் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். கிஷோரும் சாந்தமூர்த்தியும் தலா ஒரு DVD வாங்கிக் கொண்டனர். அந்த நபர் "வணக்கம் சார்" என்றபடி பரிசோதகரிடம் கொஞ்சத் தொடங்கினான்.
சிறு உரையாடலுக்குப் பிறகு "சரி சார். நான் வரேன். இத வச்சிகோங்க" என்றபடி ஒரு புது படத்தின் DVD யை கொடுக்க அவர் தலையைக் குனிந்தபடி யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு அதை வாங்கி தன் பாக்கெட்டில் செருகிக் கொண்டார்.
சில நொடித்துளிகள் கழித்து வெளியே வந்தேன். அங்கே அந்த சிறுவன் உட்கார்ந்து கொண்டு இருந்தான். அவன் முகம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் விசும்பும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவன் முதுகை தட்டி "தம்பி" என்றேன். அவன் திடுக்கிட்டு திரும்பி தன் கண்ணீரை துடைத்தான் . "இந்தப்பா வச்சிக்கோ" என்று ஒரு இருபது ருபாய் நோட்டை அவனிடம் கொடுத்தேன். அவன் வாங்கும்போது அந்த நோட்டில் காந்தியின் கண்ணில் ஒரு சொட்டு நீர் இருந்தது .

Sunday, 20 March 2011

புவி வெப்பமாதலின் விளைவு


சென்னை எண்ணூர் பகுதியில் மெல்ல மெல்ல கடல் அரித்துக் கொண்டே வருகிறது . நான் கடந்த 8 வருடங்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட 20 முதல் 30 mtr வரை நர்ருக்குள் வந்து இருக்கிறது. பெரிய பாறைகள் போடப்பட்டும் மெல்ல நுழைவதை தடுக்க முடியவில்லை. புவி வெப்பமாதலின் விளைவுகளை இங்கு பார்க்க முடிகிறது.  .





இப்படியே மெல்ல மெல்ல ஊருக்குள் வருவதால் இந்த பகுதிகளில் கரையோரத்தில் குடிசைகளில் வாழும்  விளிம்பு நிலை மீனவர்கள்  வேறு புலம் தேடி செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.