Wednesday 9 March 2011

தந்தையின் பெருமை

நுங்கம்பாக்கம். சென்னையை ஒரு மனிதனாக கருதினால் அதில் வரும் தொப்புள்தான் நுங்கம்பாக்கம்.  கடைகள் , கல்லூரிகள்  ,  அலுவலகங்கள் என எப்போதும் வாகனங்கள் குவியும் இடம். அதுவும் இரவு ஏழில் இருந்து  ஒன்பது வரை லயோலா கல்லூரி சப்வே  இருக்கும் இடத்திற்குச் சென்றால் நூற்றுக்கணக்கான  நத்தைகளாக நகரும் வாகனங்களைப் பார்க்கலாம். காட்டுமிராண்டிகள் வண்டி ஓட்டுவதைப்   பார்க்க விரும்பினால்  வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலைக்கு வருகை புரியவும் .  

நான் விற்பனைத் துறையில் பணிபுரிபவன் என்பதால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் எனது 125cc வண்டியில் பறப்பது வாடிக்கை.  பைக்கில் பயணிப்பது என்பது பருந்து வானத்தில் பறப்பது போல மீன் நீருக்கடியில் நிந்துவது போல மலையில் இருந்து வேகமாக இறங்குவதைப் போன்ற சுகமான அனுபவம். என்னதான் அலுவல் பிரச்னைகள் கழுத்தைப் பிடித்தாலும் வண்டியைக் கிளப்பிக்கொண்டு போகும்போது தழுவும் காற்று மயில் இறகைப் போல என் புண்களுக்கு நீவி விடுவது போலத்  தோன்றும்.  நான் அதை செல்லமாய் " சிறுத்தை" என்றுதான் அழைப்பேன்.
 
இப்படித்தான் கடந்த வாரம் ஒரு நாள் என் வண்டியை எடுத்துக் கொண்டு எண்ணூரில் இருக்கும் என் வாடிக்கையாளரைப்  பார்க்கச் சென்றேன்.  மெல்லிய சீற்றத்துடன் வழக்கம் போல இது என் அப்பன்  ரோடு என்று திமிராக நடு ரோட்டில் நடப்பவர்களையும் நாமெல்லாம் கனவான்கள் என்று கண்ணியமாய் இடதுபுறம்  ஓரமாக செல்பவர்களையும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதைப்  போல  
நடு ரோட்டில் துடுப்பாட்டம்  விளையாடுபவர்களையும் கண்ணாமூச்சி  பட்டாம்பூச்சி என்று காற்றில் பார்க்கும் குழந்தைகளையும் கடந்து  உறுமிக் கொண்டே சென்றான்  என் சிறுத்தை . 
 
கல்லூரி சாலையில் திரும்பும்போது  சடாரென்று என்னைக் கடந்தது அந்த சிறிய வண்டி (TVS XL Super ) . என் சிறுத்தையோடு  அதை ஒப்பிட்டால் அது மான் எனலாம். நானும் என் சிறுத்தையும் சிறு வயதில் இருந்தே தன்மானமும் கோபமும் சேர்த்து ஊட்டப் பட்டதால் அந்த மான் எங்களை சீண்டுவதாகப்  பட்டது. ஆவேசமாக முறுக்கத் தொடங்கினேன் என் சிறுத்தையின் காதுகளை . எங்கிருந்து வந்ததோ அந்த வெறி . அவன் உரசிய உரசலில் தார்ச்சாலை உஷ்ணமானது.  வானிலை ஆய்வு மையத்தில் மானை நெருங்கி திரும்பிப் பார்த்தேன். சுமார் 35 வயதுள்ள தந்தை அவருக்கு முன்னால் 4  வயதுள்ள அவர் பையன் எங்களைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அந்தப் பையன் அவன் தந்தையிடம் " அப்பா ! இன்னும் வேகமாக போங்கப்பா. நாம்தான் win  பண்ணனும்  " என்று சொன்னான். அவரும் கீதா உபதேசம் பெற்ற அர்ஜுனன் போல தனது மானை விரட்டினார். இப்படி நாங்களும் அவர்களும் மாறி மாறி முன்னேறிக் கொண்டு இருக்க  பாந்தியன் சாலைக்கு முன் உள்ள பாலத்திற்கு அருகில் வரும் போது முன் இருந்த சிக்னலில் நாங்கள்  அருகருகில் காத்திருக்கத் தொடங்கினோம் .  அப்போது அந்த சிறுவன் தனது தந்தையிடம் " நீயும் இந்த பெரிய வண்டி வச்சிருந்தா நாம ஈசியா  ஜெயிக்கலாம்ல " என்றான் . அந்த தந்தை " இதிலேயே ஜெயிக்க்கலாம்டா . அது சும்மா ஷோ வண்டி " என்றார். பாவம் அவருக்கு என்ன பிரச்னையோ? குடும்பம் நடத்துவது என்பது கயிற்றின் மீது நடக்கும்  சாகசப் பயணம் அல்லவா . சம்பளம்,வாடகை,  படிப்பு செலவு, மருத்துவச் செலவு இன்னும் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகள் போல செலவுகள் .
 
பச்சை விளக்கு விழுந்தவுடன் மானும் சிறுத்தையும் பாயத் தொடங்கின.  எக்மோர் மேம்பாலம் ஏறத் தொடங்கினோம். மெல்ல மெல்ல என் சிறுத்தையின் வேகம் குறையத் தொடங்கியது.  கீழே இறங்கும் போது மான் எங்களை வேகமாக் கடந்து சென்றது. சற்று தொலைவில் அந்த சிறுவனின் குரல் " அய்யா  . அய்யா. நாம வின் பண்ணிட்டோம் . ஹோய் ஹோய் " என்று வெற்றிக் களிப்பின் கொக்கரிப்பு கேட்டது . எல்லாக்  குழந்தைகளும்  தங்கள் தந்தை மற்றவரிடம் தோற்க கூடாது என்று விரும்புகின்றன.  என் சிறுத்தையை  நான் அன்போடு  தடவிக் கொடுத்து" தேங்க்ஸ் டா "  என்றேன்.   தூரத்தில் அவன் அப்பா திரும்பி எங்களைப் பார்த்தார் . அதில் தெரிந்தது நன்றியா இல்லை எகத்தாளமா என்று தெரியவில்லை.          
 

2 comments:

  1. அன்பின் அழகிய இளவேனில் - தந்தையின் பெருமை பதிவு நன்று - அச்சிறுவனின் எதிர் பார்ப்புகள் வெற்றி பெற வேண்டுமே என்ற எண்ணத்தில் மானை விரட்டத் தூண்டுவது - சிறுத்தைக்குப் பொறுக்காமல் காதினைத் திருகுவது ........ இறுதியில் மான் வெற்றி பெற - சிறுத்தை அதுவாகத் தோற்றதா ? அல்லது சிறுவனுக்காக தோற்கடிக்கப் பட்டதா ?

    கதை நன்று - இரசித்தேன் - மகிழ்ந்தேன்

    இன்று வரை எழுதப்பட்ட 24 பதிவுகளில் இரு பதிவுகளில் ஒவ்வொரு மறுமொழியும் - மற்றுமொரு பதிவில் இரு மறுமொழிகளூம் தான் இருக்கின்றன.

    நான் அனைத்தையும் நுனிப் புல் மேய்ந்து உட்கருத்தினை உள்வாங்கி மகிழ்ந்தேன் .

    ஏன் மறுமொழிகள் வராததைப் பற்றிச் சிந்திக்க வில்லை. தமிழ் மணத்தில் இணைக்கக் கூடாதா ? முக நூலில் ஒவ்வொரு பதிவினையும் எழுதிய உடன் - சுட்டி கொடுத்து அறிமுகப் படுத்தக் கூடாதா ? பின் தொடர்பவர்களை அதிகப் படுத்தக் கூட்டாதா ? ஏதாவது செய்யுங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அன்பின் அழகிய இளவேனில் - மறுமொழிகள் வராததற்கு இச்சொற்கள் சரி பார்ப்பதும் ஒரு காரணம் - சொற்கள்சரி பார்ப்பதை எடுத்து விடுங்களேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete