Wednesday, 9 March 2011

நிலக்கரி - வருங்கால சந்ததிக்கு என்ன விட்டு வைக்கப் போகிறோம்?

இன்றைய தேவைகளில் மிக முக்கியமானதான மின்சாரம் நம் நாட்டில் கீழ்கண்ட முறைகளில் உற்பத்தியாகிறது .

1 . நிலக்கரி மூலமாக - 65 %
2 . நீரின் மூலமாக 24%
3 . அணுசக்தியின் மூலமாக 2 %
4 . காற்று மற்றும் இதர சக்திகள்( biomass ) மூலமாக 9%

இப்போது மத்திய அரசும் மாநில அரசுகளும் இன்ன பிற தனியார் நிறுவனங்களும் புதிய மின் நிலையங்களை கட்டி வருகின்றனர். இன்னும் பத்து ஆண்டுகளில் நிலக்கரி மூலமாக உற்பத்தியாகும் மின்சாரம் கிட்டத்தட்ட 75 சதவீதத்தை எட்டி விடும். நீர், காற்று மூலம் கிடைக்கும் மின்சாரம் கால நிலை, நீரின் இருப்பு ஆகியவற்றைப் சார்ந்தது என்பதால் இதில் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு வரையறை செய்ய இயலாத ஒன்றாகும். அணுசக்தியின் மூலம் கிடைக்கும் 2 சதவீதம் நிச்சயம் பெரிதளவு உதவப் போவதில்லை . இதற்கு பெரிய அளவில் செலவு செய்து அமெரிக்காவோடு ஒப்பந்தம் வேறு. அந்த பணத்தை பயோமாஸ் போன்ற வேறு முறைகளில் முதலீடு செய்து இருந்திருக்கலாம். மேலும் அணுமின் நிலையங்களில் வெளிப்படும் கழிவுகளை சரியான முறையில் கையாளவேண்டும். இதன் பின் விளைவுகளோ மிகவும் கொடியது. ( செர்னோபில் ஒரு உதாரணம் ).

எனவே மிக முக்கிய மூலப்பொருளான நிலக்கரியைத்தான் மின் உற்பத்திக்கு பெருமளவு நம்ப வேண்டி இருக்கிறது. நம் இந்தியாவில் ஒரிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா, ஜார்கண்ட் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. நம் தமிழ்நாட்டில் கூட கிட்டத்தட்ட 15000 MW அளவிற்கு புதிய திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பெரிய நிறுவனங்களான டாடா, ரிலையன்ஸ் போன்றோர் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பெரிய பணம் கொடுத்து வாங்கி உள்ளனர். நம் தமிழக பெரும் புள்ளிகளும் வாங்கி உள்ளனர் என்ற பேச்சும் உண்டு. காசை கரியாக்காதே என்று முன்பு சொல்வர். இப்போதோ காசை கரியில் போடுகின்றனர். இப்போதுள்ள நிலக்கரி இருப்பை வைத்து இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டு வரை நாம் பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு பிறகு? நம் வருங்கால சந்ததிக்கு நாம் என்ன விட்டு வைக்கப் போகிறோம்? விடை சொல்ல முடியாத கேள்வி.
வேறு மூலப் பொருள் அல்லது வேறு திட்டங்கள் மூலமாக மின்சாரம் தயாரிக்கப் போகிறார்களா? சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு மிக குறைவு . ஆனால் அதன் விலையோ மிக மிக அதிகம். இப்போதே தரமற்ற நிலக்கரியினால் மின் உற்பத்தியின் கொள்திறன் முழுவதுமாய் கிடைக்கவில்லை. 450MW கொள்திறன் உள்ள அனல் மின் நிலையங்களில் தரமற்ற நிலக்கரியினால் 350MW அளவிற்கே தயாரிக்க முடிகிறது. இனி வரும் காலங்களில் எப்படியோ?

இயற்கையின் மீது நம் அடுத்த தலைமுறை பாரத்தை போட்டு வாழ வேண்டும் போல இருக்கிறது. நாமும் நம் பங்கிற்கு மின்சாரத்தை மிச்சம் செய்யலாமே.
1 . அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் நகர் முழுக்க போடும் தொடர் விளக்குகளுக்கு தடை செய்யலாம்.
2 . புதிதாக கட்டப்படும் அனைத்து பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு கிரீன் பில்டிங் எனப்படும் தானியங்கி மின் சேமிப்பு முறைகளை கட்டயாமாகலாம். சுடு தண்ணீர் பெறுவதற்கு சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தலாம். (பெங்களுருவில் பெரும்பாலும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இதைச் செய்துள்ளனர். நிறைய வீடுகள் என்பதால் செலவு பெரிதில்லை. ஒரு வீடாக இருந்தால் மிக கடினம்) .
3 . அம்பத்தூர் போன்ற தொழிற்பேட்டைகளில் கட்டாயம் வாரம் ஒரு நாளில் 12 மணி நேரம் மின் தடை செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
நிலக்கரியை வீணடித்து வருங்கால தலைமுறையின் முகத்தில் நாம் கரி பூச வேண்டாமே ?
 

No comments:

Post a Comment