Monday 20 June 2011

குவியமில்லா ஒரு காட்சிப் பேழை


நுங்கம்பாக்கம் பகுதியின் நெற்றிபொட்டில் இருக்கும் அந்த சிறிய  பூங்கா ( சுதந்திர தின நாள் பூங்கா )  மிகப் பிரசித்தம். நத்தையின் ஓட்டினைப் போல அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் நடை பயிற்சி , இரண்டாவதில் ஓட்டப் பயிற்சி , மூன்றாவதில்  குழந்தைகள் விளையாடவும் பெரியவர்கள் உடற்பயிற்சி எடுக்கவும் வடிவமைக்கப் பட்டிருக்கும். இலக்கிய ஆட்களும் அதிகம் வருவதால் விவாத அரங்கமாகவும் பயன்படுகிறது. கோட்டைமேடு கோபால் அடிக்கடி இங்கே வருவார். பழகுவதற்கு இனிமையான பந்தா இல்லாத மனிதர். நிறைய மரங்களால் சூழப்பட்டாலும் வடக்கு மூலையில் உள்ள ஆலமரம்தான் அனைவருக்கும் பிடித்த இடம். அதன்  விழுதுகளில் சிறார்கள் சிலந்தி மனிதனின் சாகசத்தை பயிற்சி எடுக்க முனைவார்கள். 

நான் என் பையனோடு மட்டை ஆட்டம் விளையாட அடிக்கடி வருவேன். இருக்கும் முக்கால் மணி நேரத்தில் ஊஞ்சல், நடை பயிற்சி , மட்டை ஆட்டம் என்று பிரித்துக் கொள்வேன். மூன்று அடுக்கு மனிதர்களும்  இங்கு தத்தம் சீருடையில் தனித்தனியே பிரிந்து தங்கள் பணியைச் செய்வர். ஒரு சனியன்று என் மனைவி , பையனோடு விளையாட வந்தேன். அவள் வேடிக்கை மட்டும்.  நாங்கள் விளையாடி சண்டையிட்டுக் கொண்டிருந்த போது அந்த அழுக்குச் சட்டையோடு    
கிழிந்த டிராயர் அணிந்த பையன் வந்தான். பக்கத்தில் வந்ததும் லேசான நாற்றம் அடித்தது. குளிக்கவில்லையோ என்னமோ. அந்தச் சிறுவன் தயங்கி தயங்கி வந்து  " சார். நானும் கூட விளையாடாலாமா ? " என்று கேட்டான்  . ஏற்கனவே  அவனைப் பார்த்து முகம் சுளித்த என் மனைவி அவசரமாக " இல்லை. இல்லை . நாங்க கிளம்பணும் " என்று தவிர்த்து கிளம்பினாள். சற்றே என் பார்வையை அவன் பக்கம் திருப்பினேன். ஏக்கத்தோடு நோக்கிய அவன் பார்வையை சமாளிக்க முடியாமல் கிளம்பினேன்.   

அதன் பிறகு அவ்வப்போது அவனை கவனிக்க ஆரம்பித்தேன் . இதற்கு முன்னரும் அவனை நான் பார்த்து  இருக்கலாம்.  ஞாபகம் இல்லை.  கவனித்த போது அவன் தனியாகவே வருகிறான். அவன் ஒவ்வொரு குழந்தையிடமும் தன்னையும் சேர்த்துக் கொள்ள கெஞ்சுகிறான். சிலர் தூரமாக நின்று விளையாட சிலர் இடது கையால் புறந் தள்ளுகிறார்கள். கூட்டுச் சேர்த்தலின் சந்தோஷத்தையும் நிராகரிப்பின்  வலியையும் அவன் ஒரே சீராக எடுத்துக் கொள்வதைப் பார்த்து சற்று வியந்தேன். அவன் வயது ஆறு (அ)  ஏழு இருக்கும். எங்கள் சிறு பிராயத்தில் தெருவில் ஆறு வகுப்பில் பத்து என்று நண்பர்கள் குவிந்து இருப்பர். எழுத்தாளர் மரியா அண்ணனோடு பேசுகையில் அவர் சொன்னது நினைவுக்கு வந்தது . இப்போதுள்ள குழந்தைகளுக்கு கணிணி தான் நண்பன். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள். ஏன் இவர்கள் அதிகம் மனிதர்களோடு பழகுவதில்லை என்று தெரியவில்லை. மாறி வரும் சூழலா அல்லது பெற்றோரா தெரியவில்லை. எதுவானாலும் அது நல்லதற்கல்ல என்பது மட்டும் தெரிகிறது. 

ஒரு ஞாயிறன்று பையனோடு பூங்கா சென்றேன். சில நேர மட்டை ஆட்டத்திற்கு பின் அந்தப் பையன் மெல்ல வந்து நானும் வரட்டா என்று  கெஞ்ச  நான் என் பையனிடம் " நவீன். அண்ணனோடு  விளையாடு . நான் ரெண்டு ரவுண்டு ஓடி விட்டு வருகிறேன் " என்று சொல்லி ஓடத் துவங்கினேன். அந்தப் பையனிடம் " நீ கொஞ்சம் தோற்பது போல் நடி. இல்லாவிட்டால் ஒழுங்காக விளையாட மாட்டான் " என்று   சொல்லிவிட்டு கிளம்பினேன்.   முதலில் வெறுப்போடு விளையாடிய நவீன் பிறகு அந்தப் பையனின் சாதுர்யத்தால் கூச்சலோடு ஆடிக் களித்தான். சிறிது நேரம் கழித்து நான் அந்த பையனிடம் " இவனோடு விளையாட வேண்டும் என்றால் நாம் தோற்றாக  வேண்டும். நீ விட்டுக் கொடுத்து  விளையாடுவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது தம்பி. உன் பெயர் என்ன ?  உங்க வீடு எங்கே ? " என்று கேட்டேன். அதற்கு அவன் " மணி சார். வீடு இங்கதான் சார். பக்கத்துல " என்றான்.  நடையைக் கிளப்பினோம்.  

சில நாட்கள் கழித்து காலை ஐந்தரை ஆறு மணிக்கு குளக் கரை சாலை வழியாக வண்டியில் பூங்கா நோக்கி விரைந்தேன். மெல்லிய காற்று வருட முகத்தில் விழுந்த முடியை பின்னுக்கு தள்ளி சுற்றும் முற்றும்  பார்த்துக் கொண்டு போகையில் அந்த நடை பாதையில் ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவன் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மெல்ல கடந்து செல்லும் போது  சற்றென்று வேகம் குறைத்து அந்த சிறுவன் முகத்தைப் பார்க்கையில் ஒரு நிமிடம் எரிமலையோடு பூகம்பம் தாக்கிய நகரைப் போல முற்றிலும் சிதைந்துப் போனேன்.  அந்தச் சிறுவன் மணி , அய்யோ. இயற்கை ஏன் தனது கொடூரத் திரையை எனக்கு விலக்கி காட்டுகிறது ?  துண்டு துண்டாக என்னை ஏன் உடைத்துப்  போடுகிறது ? 

பூங்காவிற்குள்  தோய்ந்த முகத்தோடு ஓடத் தொடங்கினேன். பீஷ்மரின் மீது வீசப்படும் அம்புகள் போல கேள்விகள் என்னைத் துளைக்க ஆரம்பித்தன.   

1 .  மழை பெய்யும் போது அவர்கள் எங்கே தூங்குவார்கள் ? 
2 . அவன் படிப்பானா ?  மாட்டானா ? 
3 .  அடுத்த வருடம் அவன் அப்பா அவனை ஒரு குடிசையிலாவது தங்க வைப்பாரா மாட்டாரா ?  
4 . அவனுக்கு உதவி செய்யலாமா ? 
5 .   சாப்பாட்டிற்கு என்ன செய்வான் ? 
  
குழப்பமாக ஓடி ஓய்வு எடுக்க அந்த ஆலமரத்திற்கு பக்கத்தில் உள்ள திட்டில் உட்கார்ந்தேன். அருகில் கவிஞர்கள் கத்திக்  கண்ணன் மற்றும் போ. ஐயப்பன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப்    பார்த்து " எப்படி இருக்கீங்க? " என்று கேட்க " உங்க கவிதைகளைப் போல ஒரே குழப்பமாக இருக்கேன். கொஞ்சம் என்னைப் போன்ற பாமரனுக்கு புரிகிறார் போல் எழுதுங்களேன். தெளிவாகிடுவோம்ல " என்றேன் . கண்ணன் "  ஏன்பா . இன்னைக்கு வேற யாரும் கிடைக்கவில்லையா ? " என்று கூற இன்னமும் என் குரங்கு மனம் வேறு எங்கும் தாவாமல் ஈட்டியாய் ஒரே இடத்தில் நிலை  கொண்டு மணியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.     

1 comment:

  1. வாழ்வில் எல்லாம் புரிந்து விடுவதில்லை நண்பனே
    எண்ணற்ற கேள்விகளுக்கும் விடை கிடையாது
    மணிக்கு ஏன் இந்த நிலை என்று பலரிடம் கேட்டுப்பாரு. ஒவ்வொருவரும் ஒரு பதில் சொல்லுவார்கள், எந்த பதிலிலும் திருப்தி அடைய வேண்டாம். தேடுவோம் தேடுவோம் ஓடி ஓடி தேடிக்கொண்டே இருப்போம் !!!

    ReplyDelete